செல்வேந்திரனின் உரை

நண்பர்களே,

1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி சகாரா கோப்பை முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இளம் வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் நுழைந்த தேபஷிஸ் மொஹந்தி எனும் ஒரிஸாக்காரருக்கு அது ஒரு மகத்தான நாளாக அமைந்தது. அதிவேக லெக் கட்டர் வீசி பாகிஸ்தானின் சிறந்த ஆட்டக்காரரான சயீத் அன்வரை அவர் க்ளீன் போல்டாக்கினார். மொஹந்தி பந்து வீசும் ஸ்டைலும் திறமையும் கிரிக்கெட் வர்ணனையாளர்களால் பெரிதும் புகழப்பட்டது. அன்றிரவு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றிருப்பார். ஆனால், அந்த முழு ஆட்டத்தினையும் விடிய விடிய விழித்திருந்து பார்த்த 15 வயது சிறுவனான எனக்கு அந்த ராத்திரியை இன்று இந்த மேடையில் நினைத்தாலும் உள்ளம் நடுங்குகிறது. அன்று கிரிக்கெட் பார்க்கும் வெறியில் வீட்டை விட்டு வெளியேறினவன் நள்ளிரவுக்கு மேல்தான் வீடு திரும்பினேன். பையனைக் காணோம் என பதறி தெருத்தெருவாக தேடிய என் தாய் என்னை கண்டபடி திட்டினார். கடைக்குட்டி பயல் மீதுள்ள பாசத்தினால் உருவான பதட்டம் அது. அதைப் புரிந்துகொள்ளாத நான், இந்த உலகில் எந்த மகனும் தன் தாயைக் கேட்க கூடாத ஒரு வார்த்தையைக் கேட்டு விட்டேன். இடிந்து போய் விட்ட என்னுடைய அம்மா இனி உன்னுடன் ஒரு வார்த்தை பேச மாட்டேன், உன் சம்பாத்தியத்தில் ஒரு வாய் சோறு உண்ணப் போவதில்லை என்றாள் கண்ணீருடன். அவள் இருதய நோயாளி. சகாரா தொடரின் ஐந்தாவது ஆட்டம் முடிந்து செளரவ் கங்குலி தொடர் நாயகன் கோப்பையை உயர்த்திப் பிடித்த நாளில் அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் துள்ளத் துடிக்க மரித்துப் போனார்.

நண்பர்களே.. ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் தலை மீது எத்தனைப் பெரிய பாவத்தின் மூட்டை? தாயைக் கொன்றதன் மாபழி. அந்த அகால மரணம் எனது குடும்பத்தைச் சிதறடித்தது. ஏன் இப்படி செய்தாய் என என் குடும்பத்தார் ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை. அவர்கள் கருணை மிக்கவர்கள். நான் பல மாதங்கள் இருளில் முடங்கிக் கிடந்தேன். செல்ல அம்மாவை இழந்த சோகம், குற்றவுணர்ச்சி, சுயகழிவிரக்கம், கசப்பு. எங்கும் கசப்பு. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் இருளடைந்த வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தேன். குழி விழுந்த கண்கள், பரட்டைத் தலை, கிழிந்த சட்டை என சற்றேறக்குறைய பைத்திய நிலை. கைக்கு கிடைத்த புத்தகங்களை கசப்புடன் வாசித்துக்கொண்டிருந்தேன். தற்செயலாக வாசித்த வல்லிக்கண்ணன் கதை ஒன்றில் கிருஷ்ணாபுரத்து சிற்பத்தை வியந்து ஒரு வரி இருந்தது. கிருஷ்ணாபுரம் இங்கேதானே இருக்கிறது.. அடைந்து கிடப்பதற்குப் பதில் சும்மா போய் வரலாமே என ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு சுமார் 45 கிலோமீட்டர்கள் மிதித்து கிருஷ்ணாபுரம் ஆலயத்திற்குள் நுழைந்தேன்.

அன்றெல்லாம் அந்த ஆலயம் அத்தனைப் புகழ் மிக்கதில்லை. எப்போதாவது வரும் பார்வையாளர்களிடம் விளக்குக்கு கொஞ்சம் எண்ணெய் வாங்கிக் கொடுத்தால் தேவலை என அர்ச்சகர் கேட்கும் நிலையில் இருந்தது ஆலயம். குறிப்பாக சிற்பங்கள் கம்பி வலைக்குள் சிறையிடப்பட்டிருக்கவில்லை.
கோவிலுக்குள் நுழைந்த நான் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து விட்டேன். அத்தனை தத்ரூப சிற்பங்கள் அடங்கிய கலைக்கூடத்தை நான் அதற்கு முன் சென்று பார்த்ததே இல்லை. துல்லியமும் உயிர்த்துடிப்பும் கொண்ட பாண்டவ சிற்பங்கள். தூர்தர்ஷனில் பார்த்த பாண்டவர்கள் இல்லை இவர்கள். அர்ச்சுனன் தாடி வைத்திருக்கிறான். கர்ணன் முறுக்கு மீசை வைத்திருக்கிறார். தர்மனுக்கு நல்ல ஜடை இருக்கிறது. கால் நகங்கள், நரம்புகள், சதைச் சுழிகள், நுண்ணிய வேலைப்பாடுள்ள நகைகள்,  அமுது சுரக்கும் கனத்த முலை கொண்ட  விழிதிகழ்அழகிகள், இடையென்ற ஒரு பாகம் இல்லாத நங்கைகள் - வாய் பிளந்தபடி ஒரொரு சிற்பத்தையும் பார்த்தபடியே வந்த நான் இலங்கை இளவரசி சிற்பம் இருந்த தூணின் பின்புறத்தை தற்செயலாகப் பார்த்தேன். குபீரென சிரித்து விட்டேன். ஆறு மாதத்தில் முதல் சிரிப்பு. பிடி கொள்ளாத சிரிப்பு. கருவறைக்குள் இருந்த அர்ச்சகர் பதறி ஓடி வந்து என்னவென்று விசாரித்தார். நான் சிற்பத்தை கைகாட்டி சிரித்தேன். ஒரு கோமாளி சிற்பம் அது. அவன் ஒருவேளை இளவரசியின் விளையாட்டுத் தோழனாகவோ விதுஷகனாகவோ இருக்கலாம். பேழை வயிறு,  வளைந்த கால்கள், பார்த்தாலே டேய் மாங்கா மண்டையா என தலையில் ஒரு கொட்டு வைக்கத் தோன்றும் ஒரு முகம், எகனை மொகனையான உடல் வாகு. என்னத்துக்குடே இப்படி கெடந்து சிரிக்குற என்றார் ஐயர். கிழிந்து தொங்கும் என் சட்டைப் பாக்கெட் அவருக்கு சந்தேகத்தை வரவழைத்திருக்கலாம். கெளம்புடே நடையடைக்கணும் என விரட்டினார். நான் அவரைப் பார்த்தேன்.  அதே தொப்பை, வளைந்த கால்கள், அதே மாங்குடி முகம். இதோ இன்னொரு இலங்கை இளவரசர் என்றேன் அவரைப் பார்த்து. மீண்டும் சிரிப்பு பொங்கியது. அவர் கோபத்தில் அடிக்க கையை ஓங்கினார். ‘அம்மா செத்து 6 மாசம் ஆச்சு சாமி.. இன்னிக்குத்தான் சாமி சிரிக்கறேன்’ என்றேன். அவருக்கு கண்கள் பொங்கியது.. சிரிடே மக்கா.. சிரிடே.. இன்னிக்குப் பூரா கெடந்து சிரிடே.. நீ சிரிக்கணும்னுதாண்டே கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த சிலையை அடிச்சி வச்சிருக்கார் என்றவர் கருவறைக்கு உள்ளே சென்று ஒரு இலையில் புளியோதரை வைத்து கொடுத்து விட்டு சென்று விட்டார். அன்று எத்தனை மணி நேரம் அந்தச் சிலைகளின் முன் நின்றிருப்பேன் என நினைவில்லை.
நண்பர்களே, அகோரபத்திரரின் ஓங்கிய சிற்பத்தின் முன் நிற்கையில் ஒன்றை உணர்ந்துகொண்டேன் “கலையும் இலக்கியமும் மனிதனின் அன்றாட கவலைகளிலிருந்து, அலுப்பூட்டும் அபத்தத்திலிருந்து அவனைக் கண நேரமேனும் மீட்டு மேன்மையானதொரு உலகில் சஞ்சரிக்க வைக்கிறது”. அன்று நான் சபதம் கொண்டேன். இனி ஒருபோதும் எனக்குத் துக்கமில்லை. நான் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. என் மிச்ச வாழ்வை புத்தகங்களைச் சுற்றியே அமைத்துக்கொள்வேன். புத்தகங்கள் அடித்துச் செல்லும் திசையில்தான் நான் கரை ஒதுங்குவேன் என. அன்று தொட்டு இன்று வரை வாசிக்காத நாளென ஒரு தினம் என் வாழ்க்கையில் இருந்ததில்லை. வாசிக்கிறவர்கள், எழுதுகிறவர்கள், சிந்திக்கிறவர்கள், பேசுகிறவர்கள், கலைஞர்கள் தவிர நண்பர்களென என எவரும் இல்லை. நண்பர்களே, வல்லிக்கண்ணனின் அந்த கதையை வாசித்திராவிட்டால் நான் பைத்தியம் பிடித்துச் செத்திருப்பேன். அந்த வரி இல்லாமல் நான் கிருஷ்ணாபுரத்துக்கு வந்திருக்கவே மாட்டேன். புதுமைப் பித்தனை வாசித்திருக்கா விட்டால் திட்டிவாசல் எனும் சொல்லையே நான் கேள்விப்பட்டிருக்க மாட்டேன். வண்ணதாசனை வாசித்திருக்காவிட்டால் குறுக்குத்துறை ஆற்றில் வெள்ளம் பந்தல் மண்டபத்தைச் சூழ்ந்து ஓடுகையில் அதன் மேற்கூரையில் மீது பதைத்தபடி நிற்கும் ஆட்டுக்குட்டியை நான் மனக்கண்ணில் பார்த்திருக்க முடியாது.

இன்று பல லட்சம் புத்தகங்கள் சூழ நிற்கும் இந்த மேடையின் நின்று நினைத்துப் பார்க்கிறேன். கவிக்குலத்தரசன் தேவதேவன் முன்னிலையில் என் திருமணம் நடந்தது.  என் வீட்டைத் திறந்து வைத்து மூத்த மகள் இளவெயினிக்கு ஜெயமோகன் வித்யாரம்பம் செய்தார். இளையவள் இளம்பிறைக்கு நாஞ்சில் நாடன் உடனிருக்க பெயர் சூட்டினோம். தமிழகத்தில் தீவிரமாக வாசிக்கிற ஓரிரு பெண்களில் என் மனைவியும் ஒருவர். தமிழில் எழுதுவதையே தொழிலாக அமைத்துக்கொண்டார். இன்று தமிழகத்தில் இலக்கிய கூடுகைக்கு குடும்பத்தோடு செல்கிறவர்களில் பவா. செல்லத்துரை, ஜெயமோகனுக்கு அடுத்த குடும்பம் என்னுடையதுதான் என்று நினைக்கிறேன். தமிழின் சிறந்த நூல்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. அல்லது மிகச்சிறந்த நூலகத்தில் நான் வசிக்கிறேன். இவற்றை இந்த மேடையில் நின்று பீற்றிக்கொள்ள எனக்கு கூச்சம் ஏதுமில்லை.

நண்பர்களே, இலக்கிய வாசிப்பின் பயன்மதிப்பை பற்றி தொடர்ந்து கேள்விகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அத்தகைய கேள்விகளை எதிர்கொள்ளும்போதெல்லாம் நான் ஒரு சம்பவத்தை குறிப்பிடுவதுண்டு. ஒரு கல்லூரியில் ஜெயமோகன் உரையாற்றிக்கொண்டிருக்கிறார். திடீரென ஒரு மாணவன் எழுந்து ‘சார் சும்மா இலக்கியம் இலக்கியம்னு சொல்றீங்களே.. இலக்கியம் வாழ்க்கைக்குச் சோறு போடுமா?’ என கேட்கிறார். சக மாணவர்களிடமிருந்து பலத்த கரகோசம் கிளம்புகிறது. ஓர் அற்புதமான கேள்வியை கேட்டு விட்ட திருப்தியில் கூட்டத்தை பெருமை பொங்க விழி தூக்கிப் பார்க்கிறார் அந்த மாணவர். ஜெயமோகன் ஒரு கணமும் தாமதியாது உறுதியான குரலில் சொன்னார் “இலக்கியம் வாழ்க்கைக்குச் சோறு போடாது; ஆனால் சோற்றால் மட்டுமே நிரம்பி விடாத ஏதோ ஒன்று உனக்குள் இருக்குமாயின் அந்த இடத்தை இலக்கியம் நிரப்பும்” என்று. ஆம் நண்பர்களே, நாம் சோற்றால் அடித்த பிண்டங்கள் அல்ல. ஒரு மோதிர வளையம் அளவிற்கேயான மிகச்சிறிய வாழ்க்கைதான் நமக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் நிகர்வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை பேரிலக்கியங்கள் நமக்களிக்கின்றன. உக்கிரமான கொந்தளிப்பை சாந்தப்படுத்துகிறது, ஆர்ப்பாட்டமான டாம்பீகத்தின் தலையிலடித்து உலகின் துயரங்களைப் பார் என்கிறது. ஆன்மீகமான தத்தளிப்பை உருவாக்குகிறது அல்லது தத்தளிப்பிற்குப் பெரும் மருந்தாகிறது. ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பார்வையை உருவாக்கிக்கொள்வதில் பங்களிக்கிறது.

நண்பர்களே, இந்த மேடையில் தமிழின் மிகச்சிறந்த சிந்தனையாளர் டி. தர்மராஜ் இருக்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக என்னை வழிநடத்தும் நாஞ்சில் நாடன் இருக்கிறார். இன்றெனக்கு அவர் எழுத்தாளர் மட்டுமல்ல. என் மனைவிக்குப் பெரியப்பாவாகவும், என் மகள்களுக்குத் தாத்தாவாகவும் மாறிவிட்டவர். இந்த அரங்கு ஒரு சிந்தனையாளர், ஒரு படைப்பாளி, ஒரு இலக்கிய வாசகன் எனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் எனும் முன்னோட்டை எனது பெயருக்கு முன் பார்த்தபோது உள்ளபடியே நான் துணுக்குற்றேன். அன்பு கருதி மயன் ரமேஷ் ராஜா செய்ததை தமிழ்ச் சமூகம் மன்னிக்க வேண்டும்.

***

நண்பர்களே.. பெருநகரங்கள், சிறிய நகரங்கள் என்ற பாகுபாடில்லாமல் புஞ்சைப் புளியப்பட்டி போன்ற சிற்றூர்களிலும் கூட  புத்தகத் திருவிழாக்களும், இலக்கிய கூடுகைகளும் நடைபெறுகின்றன. நாளையே இலஞ்சியில் புத்தகத் திருவிழா என்றால் கூட நான் ஆச்சர்யம் கொள்ளமாட்டேன். இத்தகைய திருவிழாக்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் ஆவதையும், நூல்கள் விற்றுத் தீர்வதையும் கடந்த பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். வாங்கும் திறன் அதிகரித்து விட்ட அளவிற்கு நம் வாசிக்கும் திறன் வளர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்பேன். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வாசித்த நூல்களைக் கொண்டு அந்த ஆண்டினை மதிப்பிடுவது என் வழக்கம். 2017-ஆம் ஆண்டில் 60 நூல்களைத்தான் வாசிக்க முடிந்தது என திருக்குறளரசியிடம் அங்கலாய்த்தேன். அவள் சொன்னாள் “நண்பனே இந்தியாவிலே ஓராண்டுக்கு 60 நூல்கள் வாசித்தவர்கள் பத்து பேர்கள்தான் இருப்பார்கள்” என்று.

நான் சமூக ஊடகங்களின் தேடுபொறியில் வழக்கமாக செய்யும் செயல் ஒன்றுண்டு. புதுமைப்பித்தன், பிரமிள், நகுலன், சுந்தரராமசாமி என உள்ளீடு செய்து தேடிப்பார்ப்பேன். ஒரு மாதத்தில் அதிகபட்சம் ஓரிரு முறை கூட அந்தச் சொற்கள் எந்த விவாதத்திலும் அல்லது அரட்டையிலும் குறிப்பிடப்பட்டிருக்காது. ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்கள் மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை எழுத்தாளர்களின் புகழைப் பொறுத்து விற்பனையாகிறது. அச்சிலும், இணையத்திலும் மூன்று அல்லது நான்கு மதிப்புரைகளைக் கூட காண முடியாது. மதிப்புரைகளை விடுங்கள். ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாகவோ அல்லது ஒரு வரி ட்வீட்டாக கூட பார்க்க முடியாது. ஐந்தாயிரம் விற்ற புத்தகத்தில் ஒரு ஐந்து பேருக்குக் கூட சொல்வதற்கு எந்த கருத்தும் இல்லையா?

இன்றைய வாசிப்பிற்குப் பெரிதும் தடையாக இருப்பது நேரமின்மையும் கவனச்சிதறலும்தான். கூடுதலாக இன்னொன்றை சொல்வதானால் இலக்கற்று இருப்பதும் திட்டமிடுதல் குறைபாட்டையும் சொல்வேன். எழுத்தாளர்களைப் போலவே வாசகர்களும் தங்களது எல்லைகளை உறுதியாக வரையறுத்துக்கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன். மனிதர்களை இயந்திரங்களாகக் கருதும் உலகளாவிய நிர்வாக முறை இன்று ஒவ்வொரு துறையிலும் புகுந்திருக்கிறது. வாழ்க்கைப் பாட்டிற்காக மூளையும் உடலும் கொதிக்க கொதிக்க உழைத்தாக வேண்டிய ஓடியாக வேண்டிய வாழ்க்கையில் எவ்வகையிலும் முக்கியத்துவம் இல்லாத நூல்களுக்காக நேரம் ஒதுக்குவது ஒரு கொடுங்குற்றம் என்பேன். குறைந்தபட்சம் அடுத்த இரண்டாண்டுகளுக்குள் வாசித்து முடிக்க வேண்டிய நூல்களின் மேப் ஒன்று ஒவ்வொரு வாசகனிடமும் இருக்க வேண்டும். கூடிய மட்டும் அதை விட்டு விலகாதிருத்தல் வேண்டும். உதாரணமாக 2016-ஆம் ஆண்டு முழுக்க தினம் ஒரு சிறுகதையேனும் வாசிக்க வேண்டும் எனும் திட்டம் இருந்தது. 2017-ல் நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான உலக அளவில் முக்கியமான புது தியரிக்களை வாசிக்க உறுதி எடுத்திருந்தேன். நண்பர் ஒருவர் தமிழக வரலாறு மற்றும் தொல்லியல் நூல்கள் அனைத்தையும் கடந்த ஆண்டு வாசித்து முடித்தார். இன்னொருவர் தமிழில் வெளியான அனைத்து முக்கியமான பயண நூல்களை வாசித்தார். இளம் எழுத்தாளர் அதிஷா 2018-ஆம் ஆண்டு முழுக்க ஜெயமோகன் நூல்களை வாசிக்க இருப்பதாக சூலுரைத்துள்ளார். அதற்கு 22-ஆம் நூற்றாண்டு முழுக்கத் தேவைப்படும் எனத் தெரிந்திருந்தும் அவர் இந்த ஆபத்தான பயணத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சமூக ஊடகத்தைப் போல கவனச்சிதறல் அளிக்கக் கூடிய பிறிதொன்றில்லை. சதா அலையடித்து நுரைபொங்கும் ஃபேஸ்புக்கில் இருந்து பெற்றுக்கொள்ள எதுவுமே இல்லை என்பதை நான் கண்டுணர்வதற்குள் மகத்தான ஏழு வருடங்கள் திவாலாகி விட்டது. ஃபேஸ்புக்கை நான் ஒரு மாபெரும் குப்பைத் தொட்டியாக உருவகப்படுத்திக் கொள்கிறேன். அங்கே குப்பை போட மட்டுமே நான் செல்கிறேன். வேறு நபர்கள் கொட்டும் குப்பைகள் என் டைம்லைனுக்கே தெரியாத அளவிற்கு அன்ஃபாலோ செய்திருக்கிறேன். இதனால் தமிழிலக்கிய தெருச்சண்டைகள் பலதும் என் காதுக்கே வருவதில்லை. அதனால், குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. பெரிய சிந்தனையாளர்களும் சீரிய எழுத்தாளர்களுமே கூட ஃபேஸ்புக் தரும் அழுத்தத்திற்கேற்ப செயல்பட வேண்டியிருப்பதை நான் பரிதாபமாகப் பார்த்து பரிதவிக்கிறேன். தமிழின் முதன்மையான கலைஞர்களாக நான் கருதும் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஃபேஸ்புக்கில் இயங்குவதில்லை. அதன் பொருட்டே அவர்களால் அதிகம் எழுத முடிகிறது.

நான் சமீபத்தில் வாசித்த ஸ்டீல் லைக் ஆர்ட்டிஸ்ட் நூலின் ஆசிரியர் ஆஸ்டின் க்லீயான் சில நல்ல உபாயங்களைச் சொல்கிறார். ஒருபோதும் வாசிக்கும் அறையில் மின்னணு கருவிகள் எதையும் அனுமதிக்காதீர்கள் என்கிறார். ஆம் நோட்டிபிகேஷன் என்பதும் டிஸ்ட்ராக்ஸன் என்பதும் ஒரே அர்த்தம் தரும் இருவேறு சொற்கள்தான். போலவே உங்களைச் சுற்றி வாசிக்கப்படாமல் இருக்கும் புத்தகத்தை கொண்டு மன உளைச்சல்கள் அடையாதீர்கள். அவை அப்படி இருக்க அனுமதியுங்கள். நம் வீட்டில் தேவையில்லாத எத்தனையோ குப்பைகளை நாம் நுகர்வுக்குப் பலியாகி அனுமதித்திருக்கிறோம். அவற்றின் மீது எந்த விமர்சனமும் இல்லாத நமக்கு புன்னகைக்கும் புத்தகங்கள் மீது ஏன் வருத்தம் வேண்டிக் கிடக்கிறது. ஃபேமிலி ட்ரீ போல ஒரு ரீடிங் ட்ரீ வரைந்து கொள்ளுங்கள் என்கிறார். உங்களுக்குப் பிரியமான எழுத்தாளர். அவருக்குப் பிரியமான எழுத்தாளர். அவருக்குப் பிரியமானவர் என ஒரு படைப்பு மரபு மரம். உதாரணமாக, ஜெயமோகன், ஐஸக்பாஸ்விங்கர், அசோகமித்திரன், புதுமைப் பித்தன், பஷீர் ஒரு ரீடிங் ட்ரீ வைத்துக்கொண்டு ஒராண்டு முழுக்க வாசிக்கலாம்.

நான் தினமும் காலையும் மாலையும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துகிறேன். இதனால் தினமும் இரண்டு மணி நேரங்கள் வாசிக்கக் கிடைக்கிறது. எனது நண்பர் ராஜமாணிக்கம் அதிகாலை அலாரம் வைத்து எழுந்து வாசிக்கத் துவங்குகிறார். உலகம் கண் விழித்து அவரை அன்றாடத்திற்குள் இழுக்கத் துவங்குவதற்கு முன் நான்கு மணி நேரத்தில் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்து விடுகிறார்.

இன்று ஒருவர் புத்தகங்களை காசு கொடுத்துதான் வாங்கியாக வேண்டுமென்றில்லை. இலக்கிய வாசகர் என சற்று பெயரெடுத்து விட்டாலே அன்பளிப்பாகவும், கருத்து கேட்டும் புத்தகங்கள் உங்கள் மீது படையெடுத்த படியே இருக்கும். நல்ல புத்தகங்கள் வாழ்வை மாற்றும் என்பது உண்மையானால், மோசமான புத்தகங்கள் வாழ்வை சீரழிக்கும் என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் முகத்தாட்சண்ய வாசிப்பில் நேரத்தை வீணாக்காதிர். புத்தகங்கள் பொழுது போக்கு சாதனங்கள் அல்ல. உண்மையில் பொழுதை யாரும் போக்க வேண்டியதே இல்லை. ஆகவே, படுக்கையில் தூங்கும் வரை அல்லது கழிப்பறையில் கடன் முடியும் வரை வாசிக்க வேண்டிய பொருள் அல்ல புத்தகங்கள். நேரம் ஒதுக்கி, கவனம் குவித்து, அத்தனை நுட்பங்களையும் அள்ளும் ஆவேசத்துடன் வாசிக்க வேண்டிய ஒன்று. ஒருவகையில் அதுவும் வேலைதான். அதற்குரிய அக்கறையுடன் புத்தகங்களை அணுகுங்கள். எந்த நூலையும் முன்முடிவுகளற்று வாசியுங்கள், உங்களை முட்டாளடிக்க வேண்டுமெனும் நினைப்பில் எந்த மகத்தான படைப்பாளியும் கிளம்பிவரவில்லை என்பதை நம்புங்கள். இறுதியாக, வாசித்த புத்தகங்களைப் பற்றி சிறு குறிப்பெனும் எழுதுங்கள்.

புத்தகம் வாங்கிக் கேட்டு அழும் சில குழந்தைகளை சில பெற்றோர் அடித்து இழுத்துச் செல்வதை கடந்த இரண்டு நாட்களில் கவனித்தேன். புத்தகம் ஏதோ ஒரு வகையில் தனது பிள்ளைகளை உருப்படாமல் ஆக்கி விடும் அல்லது எதிர்காலத்தை கெடுத்து விடும் என்கிற மூட நம்பிக்கை நிலவுகிறது. கல்வி வெறி,  சம்பாத்திய வெறி இந்த மூடத்தனத்திற்கு காரணம். எதையும் பொருளியலைக் கொண்டு மட்டுமே மதிப்பீடும் அவர்களுக்காக நான் இதைச் சொல்கிறேன். புத்தக வாசிப்பு என்பது தொழிலை அல்லது வருமானத்தை கெடுக்கும் செயல் என மூட நம்பிக்கை கொள்ளாதிருங்கள். உலக கோடீஸ்வரனான வாரன் பஃபெட் நாளொன்றுக்கு 800 பக்கங்கள் வாசிக்கிறார். அலிபாபா ஜாக்மா, ஃபேஸ்புக் ஸக்கம்பெர்க், ட்வீட்டர் ஜாக் போன்றவர்கள் வாசிப்பு விடுமுறை எடுத்துக்கொண்டு வாசித்து தள்ளுகிறார்கள். சமீபத்தில் உருவான இணைய பிரபல கோடீஸ்வரர் டாய் லோபஸ் தான் தினம் ஒரு புத்தகம் வாசித்ததுதான் கோடீஸ்வரர் ஆனதற்கு முதன்மையானதற்கு காரணம் என்கிறார். சி.ஈ.ஓக்களுக்காக புத்தகத்தை வாசித்தளிக்கும் மெண்டர்பாக்ஸ் நிறுவன அதிபர்கள் கோடீஸ்வரர்களாக வலம் வருகிறார்கள். எவ்வளவு கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு பெற்றுக்கொள்கிறோம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நண்பர்களே, நேற்றும் இன்றுமாக என் கையிலிருக்கும் இந்தப் புத்தகத்தினை (இந்தப் பிரபஞ்சத்தின் பெயர்-கதை - செங்கதிர் மொழிபெயர்த்த சிறுகதைகள்) வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிதமிருக்கும் 20 பக்கங்களை அடுத்த அரைமணி நேரத்திற்குள் வாசித்து விடுவேன். இன்றிரவு நான் சயீத் அன்வரை க்ளீன் போல்டாக்கிய தேபஷிஸ் மொஹந்தியைப் போல மகிழ்ச்சியுடன் உறங்கச் செல்வேன்.
நன்றி. வணக்கம்.

(11-02-2018 அன்று நெல்லை புத்தகத் திருவிழாவில் ஆற்றிய உரை)

Source:  https://www.facebook.com/story.php?story_fbid=10155966570558211&id=574638210

Comments